விகடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆதவ் அர்ஜுனா, தற்போதைய அரசியல் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் செல்வாக்கு குறித்து மிகவும் ஓப்பனாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். “எல்லா சேனல்களும் ஏன் ஒருவருடைய பேச்சை மட்டும் விடாமல் கவர் செய்கிறார்கள்?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் ஒருவரை நம்பினால் மட்டுமே அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்பார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

கமல்ஹாசன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகள் காந்தியவாதக் கூட்டங்கள் நடத்தி, அதில் முதல்வர் ஸ்டாலினையே சிறப்பு விருந்தினராக அழைத்தாலும், அந்தப் பேச்சுக்கள் ஏன் பெரிய அளவில் மக்களிடம் எடுபடவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். அதேபோல் ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களின் பேச்சுகளும் இன்று ஏன் விவாதப் பொருளாக மாறவில்லை என்பதையும் ஒப்பிட்டுப் பேசினார்.

​”மக்கள் தங்கள் போனில் 15 நிமிடம் செலவு செய்து ஒருவரின் பேச்சைக் கேட்கிறார்கள் என்றால், அந்த நபர் மீது அவர்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம்” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். கடந்த கூட்டத்தில் விஜய் பேசியதை ஒட்டுமொத்த தமிழகமும் முழுமையாகப் பார்த்ததே இதற்குச் சாட்சி என்றும், அந்த ஈர்ப்புதான் இன்று அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கை இல்லாத ஒருவரை மக்கள் ஒருபோதும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்றும், அந்த வகையில் விஜய்யின் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் ஆழமாகச் சென்றடைவதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.