கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வினி (21) என்ற இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு நேரத்தில் அஸ்வினி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், கவலையடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் அவரைப் பல இடங்களில் தேடினர். இறுதியாக, அருகிலிருந்த ஒரு விவசாயக் கிணற்றில் அஸ்வினியின் உடல் மிதப்பைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத நபர்களால் அஸ்வினி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சிர்வார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 வயது இளம் பெண் கடத்தப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், அந்த கிராம மக்கள் மட்டுமன்றி கர்நாடக மாநிலம் முழுவதையும் ஆழ்ந்த துயரத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.