சென்னையில் இருந்து மங்களூருக்கு கடந்த 3ஆம் தேதி ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டினை திருப்பூரை சேர்ந்த ஒரு 34 வயது பெண்ணும் அவரது கணவரும் எடுத்த நிலையில் அவசரத்தில் குளிர்சாதன பெட்டியில் தவறுதலாக ஏறிவிட்டனர். இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக பாரதி (50) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் பாரதி அந்த தம்பதியிடம் டிக்கெட்டை கேட்ட நிலையில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை எடுத்துவிட்டு குளிர்சாதன பெட்டியில் ஏறியதால் அவர்களை தனியாக வேறொரு பெட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்தப் பெண்ணின் கணவரை ஒரு பெட்டியில் அமர வைத்துவிட்டு அந்த பெண்ணை மற்றொரு பெட்டிக்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ரயில் திருப்பூரில் வந்ததும் பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பாரதி பாலியல் அத்திமீறலில் ஈடுபட்டதாக கூறி ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி போலீஸார் வழக்கு பதிவு செய்து பாரதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னதாக ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விட்டதால் அவரது கரு கலைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.