தற்போது இருக்கும் காலகட்டத்தில் கலப்படமில்லாத பொருட்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை மிளகாய் பொடிகளையும் விட்டு வைக்கவில்லை. கலப்படம் இல்லாத மிளகாய் பொடியை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. தமிழ்நாட்டின் பாரம்பரியமான முறையில் அனைத்து குழம்புகளிலும் பலவிதமான மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதில் மிளகாய் தூள் இல்லாத குழம்பு வகைகளே இருக்காது. இதனால் தமிழ்நாட்டில் சிவப்பு மிளகாய் தூள் இல்லாத சமையலறைகளை காண்பது அரிது.

முன்னதாக பலர் வீட்டிலேயே மிளகாய் வாங்கி அரைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பல பெண்கள் அலுவலகத்திற்கு செல்வதால் கிடைக்கும் நேரத்தில் கடைகளில் இருக்கும் மிளகாய் பொடியை நேரடியாக வாங்குகிறோம். ஆனால் இவற்றில் கலப்படம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே போலி மிளகாய் பொடியை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சிலர் மிளகாய் தூளுடன் சூடான் டை என்ற வேதிப்பொருளை சேர்க்கிறார்கள். இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. அதுபோல கலர் பொடி, செங்கல் தூள் கலந்த மிளகாய் பொடியை தயாரிக்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில வழிமுறைகளை கூறுகிறது.

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூளை சேர்க்கவும். அப்படி தண்ணீரில் உள்ள மிளகாய்த்தூள் நிறம் தனியாக பிரிந்தால் அது கலப்படம். அடியில் உள்ள மிளகாய் தூளின் மிச்சங்களை கைகளில் தேய்த்து பாருங்கள். கரடு முரடான உணர்வு இருந்தால் அதில் செங்கல் தூள் சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் கைகளில் சோப்பு போல் வலுவலுப்பாக இருந்தால் அதில் சோப்பு பொருட்கள் கலந்திருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.