மும்பையில் 18 வயது மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட காவல் துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் தா்தேவ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், சீருடையில் இருந்த உதவி ஆய்வாளர் சஞ்சய் ரானே, அங்கிருந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் அந்தப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதும், பின்னர் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“>

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மும்பை காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ரானேவை உடனடியாகக் கைது செய்தனர். அவர் மது அருந்தியிருக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும், மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, டிசம்பர் 26-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு அதிகாரியே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பலத்த கண்டனங்களைப் பெற்றுள்ளது.