கர்நாடக மாநிலம் துமகூரு புறநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா, கடந்த 12-ஆம் தேதி ஸ்ரீரங்கப்பட்டணா நரசிம்மர் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று கொண்டிருந்த நிலையில், ஐஸ்வர்யா விஐபி வரிசையில் நுழைய முயன்றுள்ளார்.
அங்குக் பாதுகாப்புப் பணியில் இருந்த கியாதனஹள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சவிதா, விஐபி வரிசையில் நுழைய அனுமதி இல்லை எனக் கூறி அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, பெண் காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் சவிதா அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தன் மகள் மீதான வழக்கு குறித்துப் பேசிய எம்எல்ஏ சுரேஷ் கவுடா, தவறு செய்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் எனக் கூறியதுடன், நடந்த அசம்பாவிதத்திற்காகப் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
