வெளிநாடுகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றுக்குப் புதிய உறையிட்டு விற்பனை செய்து வந்த கும்பலை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். டெல்லியின் சதார் பஜார் பகுதியில் உள்ள பஹாரி தீர்ஜ் மற்றும் பைஸ் கஞ்ச் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 4.3 கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்தச் சட்டவிரோத கும்பலின் தலைவன் அடல் ஜெய்ஸ்வால் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 43,762 கிலோ எடையுள்ள பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் 14,665 லிட்டர் குளிர்பானங்கள், சாஸ் வகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் மும்பையைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து காலாவதி தேதிய நெருங்கிய உணவுப் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வந்துள்ளனர். பின்னர் அவற்றை டெல்லியில் உள்ள தங்களது சேமிப்புக் கிடங்கில் வைத்து, காலாவதி தேதியை மாற்றி புதிய முத்திரையிட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது நுகர்வோரின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், இந்த கும்பலுக்குப் பின்னால் உள்ள பிற நபர்களையும் தேடி வருகின்றனர்.