கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைவர் நடிகர் விஜய் தனது முதல் பெரிய பரப்புரைக் கூட்டத்தை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் டிசம்பர் 18 அன்று நடத்த முடிவு செய்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை என்ற இடத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். புதுச்சேரியைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளை ஏற்று, மிகச் சிறப்பாக இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்தக் கூட்டத்திற்குத் தற்போது திடீர் சிக்கல் எழுந்துள்ளது. பெருந்துறையில் பரப்புரைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 19 ஏக்கர் நிலம், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான விஜயபுரி அம்மன் கோவிலுக்கு உரிய இடமாகும். கோவில் இடத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறி, இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணைய ஆணையாளர் பரஞ்ஜோதி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தச் சர்ச்சையினால், தற்போது இந்தக் கூட்டம் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரனின் உறவினர் கே.கே. பாலுவுக்குச் சொந்தமான மாற்று இடத்திற்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
