தமிழகத்தில் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வரும் மார்ச் 15-ஆம் தேதி மாநிலம் தழுவிய பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால்தான் இந்தச் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள திமுக கூட்டணி, இதனால் பொதுமக்கள் மத்தியிலும் இல்லத்தரசிகள் மத்தியிலும் பெரும் அச்சம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் மத்திய அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது என அவர்கள் சாடியுள்ளனர்.
இந்தத் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டியும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 15 அன்று காலை 10.30 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. “மக்களின் அடிப்படைத் தேவையில் விளையாடுவதா?” என்ற முழக்கத்துடன் வீதிக்கு வரும் திமுக கூட்டணிக் கட்சிகளின் இந்தப் போராட்டம், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து மத்திய அரசுக்கு எதிராக ஒரு பெரிய போராட்ட அலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதால், இந்த அறிவிப்பு டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
