மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளர் ஒருவருக்கு, கடந்த 2024 ஏப்ரல் மாதம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த மகாவீர் அவஸ்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, மணமகன் கொல்கத்தாவில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணியாற்றுவதாகக் கூறி, பெண் வீத்தாரிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை வரதட்சணையாகப் பெற்றுள்ளனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சுமார் 21 மாதங்கள் கழித்துதான், தனது கணவர் வருமான வரித்துறை அதிகாரியே இல்லை என்ற திடுக்கிடும் உண்மை அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.

​இந்த மோசடி குறித்துக் கணவரிடம் கேட்டபோது, அந்தப் பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, கூடுதலாக 70 லட்சம் ரூபாய் மற்றும் கார் கேட்டு அந்தப் பெண்ணின் மாமியார் வீட்டார் வரதட்சணைக் கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில், மகாவீர் தற்போது டெல்லி சிறையில் இருப்பதும், அவரது காதலி அளித்த பாலியல் புகாரில் அவர் கைதாகி இருப்பதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், தற்போது அந்தப் போலி அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.