தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியவரதன் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த போது சாத்தங்குடியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவையில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

அதன் பிறகு பிரியவரதன் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து சினேகாவின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறோம் என கூறியுள்ளனர். பின்னர் புதுமணத் தம்பதியினரை சாத்தங்குடிக்கு காரில் அழைத்து சென்றனர். இந்நிலையில் உரப்பனூர் கண்மாய் அருகே சென்ற போது உறவினர்கள் பிரியவரதன், அவரது தாய் சின்னம்மாள் ஆகிய இருவரையும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சினேகாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரியவரதன் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சினேகாவின் தந்தை ஜீவானந்தம், ஜெயலட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்றுக் கொள்வதாக கூறி சினிமா பட பாணியில் புதுப்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.