கடலூர் மாவட்டத்தில் உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாய கூலி வேலை பார்க்கும் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோழிகள் அலறும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு நாகலட்சுமி வீட்டிற்கு வெளியே கோழிகள் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு நல்ல பாம்பு இருந்ததை கண்டு நாகலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக நாகலட்சுமி வன ஆர்வலர் கடலூர் செல்லாவுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற செல்லா அந்த நல்ல பாம்பை பிடித்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தார். சில நிமிடங்களில் நல்ல பாம்பு அடுத்தடுத்து மூன்று கோழி முட்டைகளை கக்கியதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.