கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கூறியதாவது, நான் நாகர்கோவிலில் இருந்து காரில் நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தேன். வேப்பூர்-விருதாச்சலம் சாலையில் கோமங்கலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வாய்க்காலில் பாய்ந்து தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. உடனே வந்து காப்பாற்றுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் போலீசார் அங்கு சென்று விபத்தில் சிக்கிய காரை தேடியுள்ளனர். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் போலீசாரால் விபத்து நடந்த இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. உடனடியாக அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மூலம் லொகேஷனை ஷேர் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அதன் படி அந்த நபர் அனுப்பிய இடத்திற்கு சென்று பார்த்தபோது தண்ணீரில் கார் மூழ்கி கொண்டிருந்தது.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் நெய்வேலி என்.எல்.சி சுரங்கம்-1 ஏவில் துணை பொது மேலாளராக வேலை பார்க்கும் ரமேஷ்(53), அவரது மனைவி பிரபா என்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனையடுத்து விபத்துக்குள்ளான காரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.