மத்திய கிழக்கு ஆசியாவில் ‘கிரேட்டர் இஸ்ரேல்’ உருவாகிறதோ இல்லையோ, ஆனால் ‘கிரேட்டர் ஈரான்’ உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானின் ‘பிரஸ் டிவி’ வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ஆதாரத்தின்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் ‘விக்டோரியா’ ராணுவ தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் ஒன்று அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளைத் துல்லியமாகப் படம் பிடித்து, பின்னர் ஒரு வெடிப்பை நிகழ்த்துகிறது. அதைத் தொடர்ந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்களில் ஒன்றைத் தகர்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு ஈராக்கின் ‘பாப்புலர் மொபிலைசேஷன் போர்ஸ்’ (PMF) அல்லது ‘ஹஷ்த் ஷாபி’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2014-இல் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகளை விரட்டியடிக்க அயதுல்லா சிஸ்தானியின் ஃபத்வா அடிப்படையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐ.எஸ் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக வீழ்த்திய பிறகு, இந்த அமைப்பு ஈராக் நாட்டின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புப் படையின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இது நேரடியாக அந்நாட்டு பிரதமருக்கு அறிக்கை அளிக்கும் அதிகாரம் கொண்டது.
சதாம் உசைனின் வீழ்ச்சிக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக ஈராக்கில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் நிலைகொண்டுள்ளன. ஒரு காலத்தில் 1.5 லட்சம் வீரர்களுடன் இருந்த அமெரிக்கப் படை, தற்போது வெறும் 2,500 வீரர்களாகக் குறைந்துள்ளது. “ஈராக்கிற்கு முழுமையான சுதந்திரம் பெற்றுத் தருவோம்” என்று முழங்கும் ஹஷ்த் ஷாபி அமைப்பினர், அமெரிக்கப் படைகளை ஈராக்கை விட்டு வெளியேறக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஈராக்கில் உள்ள புனிதத் தலங்களான கர்யலா மற்றும் நஜாஃப் ஆகியவற்றைத் தரிசிக்க வரும் ஈரானியப் பயணிகளுக்கு ஹஷ்த் ஷாபி அமைப்பு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இது ஈராக் மக்கள் மற்றும் ஈரானியர்களுக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டால், அதற்கு ஈராக் மண்ணைப் பயன்படுத்த விடாமல் தடுப்பதில் இந்த அமைப்பு உறுதியாக உள்ளது.
ஈரான் உடனான போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் மெல்ல மெல்லத் தங்கள் மூட்டைகளைக் கட்டத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
