மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஈரான் பாகிஸ்தான் மீது “துரோக” புகாரைச் சுமத்தியுள்ளது. பாகிஸ்தான் ஒரு “இரட்டை வேடம்” போடுவதாக ஈரான் கருதுவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்திருந்தது. தனது பழைய நண்பன் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் கப்பல்களுக்கும் இந்தச் சலுகையை ஈரான் வழங்கியது.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்திற்குப் பணிந்த பாகிஸ்தான், 10 அமெரிக்கக் கப்பல்களில் பாகிஸ்தான் நாட்டுக்கொடியைப் பறக்கவிட்டு, அவற்றை ரகசியமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கடக்கச் செய்துள்ளது. இந்தச் செயல் ஈரானை கடும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப், 10 அமெரிக்கக் கப்பல்கள் பாகிஸ்தான் கொடியுடன்  ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். அமெரிக்கா இதைத் தனது ராஜதந்திர வெற்றியாகக் கொண்டாடும் வேளையில், “நட்பின் பெயரால் பாகிஸ்தான் எங்களை முதுகில் குத்திவிட்டது” என்று ஈரான் உணர்கிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 15 அம்ச அமைதித் திட்டத்தைப் பாகிஸ்தான் முன்மொழிந்திருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாச் சூழலால், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது. “பாகிஸ்தான் ஒரு நடுநிலையான நாடு அல்ல, அது அமெரிக்காவின் நலன்களுக்காகவே செயல்படுகிறது” என்ற எண்ணம் ஈரான் அதிகாரிகளிடையே வலுத்துள்ளது.

மேலும் ஒருபுறம் ஈரானுடன் நல்லுறவைப் பேணுவது போலக் காட்டிக்கொண்டு, மறுபுறம் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் முயல்வது அதன் சர்வதேச நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த “சமநிலை அரசியல்” தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.