திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில், தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை 4 மணியளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

மேலும் துணை பொதுச் செயலாளர்களான ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ., எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்த உள்ளார். இதனிடையே, இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்  தளத்தில்,
“மலை நகரில் மாலை சந்திப்போம்!
Young Dravidians! Prepare for Glory!”
என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு, இளைஞர் அணியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.