மாமல்லபுரம் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், இதுவரை இல்லாத வகையில் அதிமுக-வை “ஊழல் சக்தி” என மிகக் கடுமையாகச் சாடினார். திமுக-வைத் “தீய சக்தி” என்று விமர்சித்தவர், அதே வேகத்தில் அதிமுக-வையும் ஊழல் சக்தியாக வகைப்படுத்திப் பேசியது அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்து ஏமாந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் இப்போது மாற்றத்திற்கான பெரும் அழுத்தத்தில் இருப்பதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

​அதிமுக-வுடன் தவெக கூட்டணி அமைக்கக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் இந்தத் தாக்குதல் அக்கூட்டணிப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. பாஜக-விற்கு அதிமுக நேரடியாகச் சரணடைந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதன் மூலம், வரும் 2026 தேர்தலில் திராவிடக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தவெக தனிப் பாதையில், ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டோடு களம் காணப்போவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.