பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணன் (34) என்பவருக்கு அதிகாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி மற்றும் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் மனிதநேயத்தின் வீழ்ச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

இதய பாதிப்புடன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றவரை, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்து அலைக்கழித்த நிலையில், வழியில் ஏற்பட்ட விபத்தில் சாலையில் விழுந்து துடித்த அவருக்கு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் யாரும் உதவ முன்வரவில்லை. அவரது மனைவி கைகூப்பி கதறி அழுது உதவி கோரியும் பல வாகனங்கள் நிற்காமல் சென்ற நிலையில், ஒரு வாடகை கார் ஓட்டுநர் மட்டும் முன்வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்; இருப்பினும், சிகிச்சை பலனின்றி வெங்கடரமணன் உயிரிழந்தார்.

ஏற்கனவே தனது ஐந்து பிள்ளைகளை இழந்து வாடும் ஒரு தாயின் கடைசிப் பிள்ளையாகவும், ஐந்து வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகளுக்குத் தந்தையாகவும் இருந்த இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், துயரத்திலும் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.