பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவி வரும் சூழல், இஸ்லாமாபாத் முதல் ராவல்பிண்டி வரையிலான பாகிஸ்தான் ஆட்சியாளர்களை நிலைகுலையச் செய்துள்ளது. அங்குள்ள ராலகோட் ஈத்கா மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், “ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதியே அல்ல” என்றும், தங்களுக்குப் பாகிஸ்தானிடமிருந்து முழுமையான சுதந்திரம் வேண்டும் என்றும் விண்ணதிர முழக்கமிட்டுள்ளனர். ஆரம்பத்தில் மலிவு விலையில் கோதுமை மாவு மற்றும் மின் கட்டணக் குறைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ‘கூட்டு மக்கள் செயல்பாட்டுக் குழுவின்’ முக்கிய நிர்வாகியான சர்தார் அமன் கான் பேசுகையில், “எங்களது உரிமைகளை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நசுக்க நினைத்தால், நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமாவதைத் தவிர வேறு வழியில்லை” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பீரங்கிகளையும், ட்ரோன்களையும் குவித்து மிரட்டினாலும், காஷ்மீர் மக்களின் இந்த ஆக்ரோஷ முழக்கம் ராணுவத்தின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. ஏற்கனவே திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தானிடமிருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் கைநழுவிப் போனால், அது அந்நாட்டின் ஒட்டுமொத்த அழிவிற்கும் வழிவகுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரிந்து போனால், பாகிஸ்தானுக்கு ஏற்படும் முதல் மற்றும் மிகப்பெரிய பொருளாதார அடி, சீனாவின் ‘சிபெக்’  வழித்தடத் திட்டத்தின் அழிவாகத்தான் இருக்கும். அரபிக்கடலின் குவாடர் துறைமுகத்தை சீனாவுடன் இணைக்கும் இந்தச் சாலைத் திட்டம், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கித்-பல்டிஸ்தான் வழியாகவே செல்கிறது. இந்த நிலப்பரப்பு கையை விட்டுப் போனால் சீனாவுடனான தரைவழித் தொடர்பு துண்டிக்கப்பட்டு, சீனாவின் பல பில்லியன் டாலர் முதலீடுகள் நீரில் மூழ்கும். அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் பாதிக்கும் மேற்பட்ட விவசாயமும் மின்சாரமும் காஷ்மீரில் இருந்து வரும் சிந்து நதிப் படுகையை நம்பியே உள்ளன. பாகிஸ்தானின் மிகப்பெரிய நீர்மின் திட்டங்களான மங்களா அணை மற்றும் நீலம்-ஜீலம் திட்டங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் அமைந்துள்ளன.

மங்களா அணை கைநழுவினால், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விவசாயம் அழிந்து, நாடு முழுவதும் நிரந்தர இருளிலும் கடுமையான பஞ்சத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும், கடந்த 75 ஆண்டுகளாக ‘காஷ்மீர் கார்டை’ காட்டி மக்களின் பயத்தைப் பயன்படுத்தி நாட்டின் பெரும் பகுதி பட்ஜெட்டை விழுங்கி வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் வாரிசு அரசியல் இதன் மூலம் முடிவுக்கு வரும். இது பாகிஸ்தானுக்குள் உள்நாட்டுப் போரை உருவாக்கி, ஏற்கனவே பிரிந்து போகத் துடிக்கும் பலுசிஸ்தான், சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வா போன்ற மாகாணங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்து, பாகிஸ்தான் என்ற நாட்டை பல துண்டுகளாக உடைத்து சிதறடித்துவிடும் என்பது நிதர்சனம்.