மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி அதிர்ச்சிகரமான புகார்களை முன்வைத்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் பெரும் ஊழல் இருப்பதாகக் கூறிய அவர், சீட் வழங்க தன்னிடம் 5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 70-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தலா 5 கோடி ரூபாய் கொடுத்துதான் வாய்ப்பு பெற்றதாகவும், ஊழலில் மூழ்கிக் கிடக்கும் கட்சிக்கு இந்தத் தோல்வி ஆச்சரியமளிக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தனது தொகுதியான ஷிப்பூரில் அடிப்படை வடிகால் வசதிகளைச் செய்யக் கோரியபோது நகராட்சி நிர்வாகமும் மம்தா பானர்ஜியும் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களை முடிக்க தனது சொந்தப் பணத்தையே செலவழித்ததாகக் கூறிய அவர், வளர்ச்சிப் பணிகளை முடக்கியதே கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
வங்காள கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த சாதனையை வைத்துள்ள மனோஜ் திவாரி, அமைச்சராக இருந்தபோதே கட்சி நிர்வாகத்தின் மீது இத்தகைய கடும் விமர்சனங்களை முன்வைத்து வெளியேறியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
