அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கெடு வைத்த பின்னர், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, திடீர் டெல்லி பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று காலை கோவை விமான நிலையம் வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். நான் சற்று நிம்மதியாக இருக்க ராமரை வணங்கிவிட்டு வரப்போகிறேன்.

கட்சியில் அனைவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதிமுக வளர வேண்டும் என்ற நோக்கத்தில் நல்லதற்காகவே சில கருத்துகளை சொன்னேன். ஆனால் பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த முடிவுகள் குறித்து கருத்து சொல்ல முடியாது. காலம்தான் பதிலளிக்கும்.” என்றார்.

அத்துடன், “இந்த பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நாளை எந்தவொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிடப்போவதில்லை.” என்றும் தெளிவுபடுத்தினார்.