காங்கிரஸ் கட்சிக்குள் தமக்கு அதிருப்தி இருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் தனது விளக்கத்தை அளித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் பேசிய அவர், தான் எப்போதும் கட்சியின் வரம்புகளை மீறியதில்லை என்றும், கொள்கை அடிப்படையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்தில் மட்டுமே தமக்கு மாற்றுக் கருத்து இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தான் எப்போதும் உறுதியாகப் பிரதிபலித்து வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான விவகாரங்களில் நாட்டின் தூதுக்குழுவை வழிநடத்தியபோது இந்திய அரசின் நிலைப்பாட்டையே முன்வைத்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற முக்கியமான காங்கிரஸ் கட்சி கூட்டத்தை சசி தரூர் தவிர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் கட்சி மாறப்போவதாகவும், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் சந்தீப் தீட்சித் போன்ற தலைவர்கள் விமர்சித்தனர்.

இது குறித்துப் பேசிய தரூர், தான் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து கட்சித் தலைமைக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டதாகக் கூறினார். மேலும், கட்சி ரீதியான குறைகளை பொதுவெளியில் விவாதிப்பதை விட, தலைமையிடம் நேரடியாகப் பேசுவதையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த தனது நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியா தனது வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பாகிஸ்தானுடன் நீண்ட கால மோதலில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதே தனது விருப்பம் என்று கூறினார்.

பஹல்காம் சம்பவம் குறித்து தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது போல, பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் தான் இப்போதும் உறுதியாக இருப்பதாகவும், இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் சசி தரூர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.