மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள இமிலியா கிராமத்தைச் சேர்ந்த அஜப் சிங் என்ற பழங்குடியின தொழிலாளி, நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் மனைவியின் அவமானத்தாலும் உந்தப்பட்டு, தனி ஒருவனாக 50 அடி ஆழக் கிணற்றைத் தோண்டி சாதனை படைத்துள்ளார்.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவியபோது, கிணறு வெட்ட அரசு அதிகாரிகளிடம் அஜப் சிங் உதவி கோரினார். ஆனால், அதிகாரிகள் அவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதோடு, பணம் இல்லாததால் அவரை விரட்டியடித்தனர்.

இதனால் வேறு வழியின்றி சாக்கடைத் தண்ணீரைக்கூட குடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அஜப் சிங்கின் மனைவி தண்ணீருக்காகத் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் மிகக் கொடூரமாக அவமானப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டார்.

மனைவியின் கண்ணீரைக் கண்ட அஜப் சிங், யாரிடமும் தண்ணீர் கையேந்தக் கூடாது என்று சபதம் எடுத்து, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்தக் கிணற்றை வெட்டுவதற்காக அர்ப்பணித்தார்.

பகலில் குடும்பத்தைக் காப்பாற்றக் கூலி வேலை செய்துவிட்டு, மீதி நேரத்தில் 2 ஆண்டுகள் பசி, பட்டினியோடு உழைத்து அஜப் சிங் இந்த 50 அடி ஆழக் கிணற்றை தனியாகவே தோண்டி முடித்தார்.

அதில் நல்ல சுவையான குடிநீர் கிடைத்த நிலையில், இன்று 45 ஆண்டுகள் கடந்தும் அரசாங்கத்தின் குடிநீர்த் திட்டங்கள் தோல்வியடைந்த கோடைக் காலங்களிலும், இந்தக் கிணறு தான் ஒட்டுமொத்த கிராமத்தின் தாகத்தைத் தீர்த்து வருகிறது.

தற்போது 71 வயதாகும் இந்த முதியவர், தனக்கு ஒரு பக்கா வீடு கட்டித் தரக் கோரி கடந்த 3 ஆண்டுகளாகப் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களுக்கு அலைந்துள்ளார்.

ஆனால், அங்கும் லஞ்சம் மற்றும் நிர்வாகக் கோளாறுகளால் அவருக்கு உதவி கிடைக்காததால், தற்போதும் மனம் தளராமல் தனது மனைவியோடு வாழ்வதற்காகக் களிமண் மற்றும் செங்கற்களைக் கொண்டு அவரே தனது கைகளால் ஒரு புதிய வீட்டைக் கட்டி வருகிறார்.