மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில், நாவலே பாலம் அருகே வியாழக்கிழமை அன்று நடந்த கோர விபத்தில் மொத்தம் எட்டுப் பேர் பலியாகி, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஒரு கண்டெய்னர் லாரியின் பிரேக் செயலிழந்ததால், அது பல வாகனங்கள் மீது மோதியது. இதில் ஒரு சிஎன்ஜி கார் லாரியுடன் சிக்கி தீப்பிடித்ததில், அதிலிருந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் எட்டுப் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், பல உடல்களை முதலில் அடையாளம் காண்பது கூட கடினமாக இருந்தது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்தபோது, இந்தக் கொடூரமான விபத்து நடந்த இடத்தில் ஒரு மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது.

விபத்து நடந்த அதிர்ச்சியிலும் பரபரப்பிலும், சிலர் காயமடைந்தவர்களுக்கும் பலியானவர்களுக்கும் உதவி செய்ய முன்வந்தனர். ஆனால், அதே நேரத்தில் வேறு சிலரின் பேராசை மேலோங்கியது. விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் உடமைகளில் இருந்து பணம் சாலையில் சிதறிக் கிடந்துள்ளது. இதைக் கண்ட ஒரு சிலர், அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் ஆவலுடன் அள்ளுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

​”மனிதநேயம் எங்கே போனது?” என்று பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீட்புப் பணிகளிலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதிலும் கவனம் செலுத்தி வரும் புனே அதிகாரிகள், இந்த வீடியோ குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இத்தகைய துயரமான நேரத்தில் கூட பணத்திற்காக அலைந்தவர்களின் செயல், பொதுமக்களின் கோபத்தைத் தூண்டி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.