நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவைகளை அரவணைத்து தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவு எந்த கட்சிக்கு இருக்கிறதோ அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள். இதனால் மத்தியில் பாஜக ஆட்சி அமையுமா இல்லையெனில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி சுகாதாரத்துறை மந்திரியுமான சவ்ரவ் பரத்வாஜ் தற்போது நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க மறைமுக அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டினார். இதேபோன்று 2024 ஆம் ஆண்டு மோடிக்கு எதிராக நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினார். எனவே அவர்கள் கையில் தான் தற்போது எல்லாம் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.