ஒரு இந்திய ஊழியர் ரெடிட் தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவரது இந்திய முதலாளியின் அணுகுமுறை மற்ற நிறுவனங்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் எழுதியதாவது, “எனது முதலாளி என்னை மதியம் 12 மணிக்கு லாக்-இன் செய்ய அனுமதிக்கிறார், மாலை 5 மணி வரை பணியாற்றச் சொல்கிறார். தேவைப்பட்டால் இரவு 7 மணி வரை இருக்கலாம், ஆனால் அதற்கு மேல் இருந்தால், முதலாளியே ‘இப்போது நேரம் ஆகிவிட்டது, லாக்-ஆஃப் செய்துவிட்டு வீட்டுக்கு போ’ என்று கூறிவிடுகிறார்.” “உங்கள் முதலாளி இப்படி வீட்டுக்கு போகச் சொன்ன அனுபவம் உங்களுக்கு உண்டா?” என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இந்த அனுபவம் அவருக்கு பெரும் நிம்மதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். “இப்போது காலை 11 மணி வரை நிம்மதியாக தூங்க முடிகிறது, மதியம் 12 மணிக்கு சிஸ்டத்தை ஆன் செய்கிறேன், மாலை 5 மணிக்கு வேலையை முடித்துவிடுகிறேன். தேவைப்பட்டால் இரவு 7 மணி வரை இருந்தாலும், முதலாளி தானாகவே ‘நேரம் ஆகிவிட்டது, கிளம்பு’ என்று சொல்லிவிடுகிறார்” என்று அவர் எழுதினார்.

இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பல பயனர்கள் இந்த முதலாளியின் மனோபாவத்தையும், வேலை-வாழ்க்கை சமநிலையை மதிக்கும் இந்த பணி கலாசாரத்தையும் பாராட்டியுள்ளனர். பலர், “எங்கள் அலுவலகங்களிலும் இப்படி ஒரு மனநிலை இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்து, இந்த அணுகுமுறையை வெகுவாக புகழ்ந்தனர்.