மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் நகைச்சுவை பேச்சும் சிரிப்பும் அவசியம் தானா என ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறுகையில் “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நகைச்சுவையாக பேசி சிரிக்கிறார். அவருக்கு ஏற்றார் போல் ஆளும் கூட்டணி எம்பிக்களும் கோஷம் இடுகின்றனர். மணிப்பூர் மாநிலம் தீப்பற்றி எரிவதை பிரதமர் மோடி மறந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

வெட்கமில்லாமல் நாடாளுமன்றத்தின் நடுவே அமர்ந்து கொண்டு பிரதமர் மோடி சிரிக்கிறார். நானோ அல்லது காங்கிரஸோ பிரச்சனை கிடையாது. மணிப்பூரில் என்ன நடக்கிறது? ஏன் அந்த கலவரம் தடுக்கப்படவில்லை? என்பதுதான் பிரச்சனை. மணிப்பூர் தீப்பற்றி எரிவதை தான் பிரதமர் மோடி விரும்புகிறார். தீயை அணைப்பதை அவர் விரும்பவில்லை. ராணுவத்தை வைத்து இரண்டு மூன்று நாட்களில் கலவரத்தை சமநிலைப்படுத்தி இருக்க முடியும். ஆனால் மத்திய அரசு அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.