தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால், தாலிக்கு தங்கம் திட்டத்துடன் திருமணமாகும் மணமகளுக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் நெசவாளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தேன்.
நெசவுத் தொழிலின் சவால்களைப் புரிந்து கொண்டு, அதை மேம்படுத்த எங்கள் ஆட்சியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, இரு பிரிவினருக்கும் சமநிலையில் ஆதரவு அளிக்கப்படும். மேலும், ஏழை நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
கைத்தறிக்கு 200 யூனிட், விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சார மானியம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவை எங்கள் ஆட்சியில் வழங்கப்பட்டன. தற்போதைய திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு உடனடி கூலி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்களுக்கு உடனடி கூலி கிடைக்கவும், மழைக்காலத்தில் உதவித்தொகை வழங்கவும், ஜிஎஸ்டி விலக்கு பெற மத்திய அரசுடன் பேசவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நெசவுத் தொழிலை நவீனப்படுத்தவும், அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் எங்கள் அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
