தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் அல்லது அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தொடர்ந்து கொட்டித் தீர்த்துவருகிறது. அதன் தாக்கம் தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் பதிவாகி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

வழக்கமாக ஆகஸ்டில் மழை குறைவாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகவும், டெல்டா மாவட்டங்களில் மிகவும் தீவிரமாகவும் இருந்து, மன்னார்குடியில் 11 செமீ, கடலூர் காட்டுமயிலூரில் 10 செமீ, நெய்வேலியில் 9 செமீ, வேப்பந்தட்டையில் 8 செமீ மழை பெய்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்படி, தென்னிந்திய வளிமண்டல மேலடுக்குப் பகுதியில் உருவான சுழற்சியால், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், வரும் 12 முதல் 15ம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35–36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26–27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று  முதல் 13ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.