செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். அப்போது அவர், “யார் வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நல்லதொரு கூட்டணியை, மெகா கூட்டணியை அமைத்து, ஆட்சிக்கு வரும் நோக்கில் செயல்படுவோம். உங்களின் விருப்பப்படி கூட்டணியை அமைப்போம். அடுத்த 6 மாத காலம் கடுமையாக, ஒற்றுமையாக, நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், “நம்முடைய வழிகாட்டி ஐயா ராமதாஸ் தான், குலதெய்வம் ஐயா ராமதாஸ் தான். அவர் உருவத்தில் இங்கு இல்லாவிட்டாலும் உள்ளங்களில் இருக்கிறார். அவருக்காக இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி வைக்கப்பட்டுள்ளது. அது ஐயாவின் நாற்காலி. அவர் பா.ம.க.வின் நிறுவனர்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் ஆசைப்படுபவன் அல்ல. ஆனால் காலத்தின் கட்டாயத்திற்கும், உங்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் உங்கள் முன் நிற்கிறேன்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும், “வியர்வையும் ரத்தத்தையும் சிந்தி இந்தக் கட்சியை உயர்த்தியாகம் செய்து வளர்த்திருக்கிறோம். ஐயா ஒருநாள் இங்கு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சாமிக்கு சில நேரங்களில் கோபம் வரும்; அப்போது திருவிழா நடத்துவோம். அதில் பூசாரிக்கே சிரமம் வரும்” என்று பேசினார்.
