சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதுடன், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்படி, ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். ஆகஸ்ட் 15 முதல் 19 வரை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
