தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை ரேஷன் கடைகள் மூலமாக ரொக்க பணமாக வழங்கப்பட உள்ள நிலையில் இந்த வருடம் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றது. தற்போது 500 ரூபாய் நோட்டுகள் அதிக மதிப்புள்ள நோட்டாக உள்ள நிலையில் வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள 6000 ரூபாய் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய் நோட்டுக்களாக பட்டுவாடா செய்யப்பட உள்ளது.

எத்தனை குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்காத நிலையில் நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து குறைந்தபட்சம் 25 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் 1500 கோடி ரூபாயை வழங்க மூன்று கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் தேவைப்படும் என்பதால் நோட்டுக்களை புதிதாக அச்சிட்ட நோட்டுகளாக வழங்குமாறு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலமாக தமிழக அரசை ரிசர்வ் வங்கி இடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.