குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம் மேல்முறையீடு செய்த 7.53 லட்சம் பேருக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்தும் இதுவரை வழங்கவில்லை எனக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையாக பதில் அளிக்கவில்லை, எனவே தங்களுடைய விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.