தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுமியை ஏமாற்றி மது குடிக்க வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வங்கி ஊழியர் உள்ளிட்ட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வெளி வடக்கு டெல்லியின் ராஜா விஹார் பகுதியில் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. உள்ளூர் சலூன் கடை உரிமையாளரான நரோத்தம் மற்றும் வங்கி ஊழியரான ரிஷப் ஆகிய இருவரும், அந்தச் சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆள் நடமாட்டமில்லாத ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த நிலையில், அவர் சுயநினைவற்ற போது இருவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தந்தை, தனது மகள் போதையில் இருப்பதைப் பார்த்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ரிஷப் மற்றும் நரோத்தம் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
