கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் பேருக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்கள் பல ஆண்டுகளாக பணி நியமனம் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டும் இருந்தபோதும், திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177-இல், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், திமுக அரசு இளைஞர்களுக்கு துரோகம் செய்து வருகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை 99 போராட்டங்கள் நடைபெற்றும் அரசு செவிசாய்க்காததால், விரக்தியடைந்த இளைஞர்கள் தற்போது 100-ஆவது முறையாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் போட்டித் தேர்வு நடத்த வழிவகுக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்து, 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக சார்பில் இந்தக் கோரிக்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும், கடந்த 2023 மே மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று ஆதரவு தெரிவித்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

போலி வாக்குறுதிகளுடன் புதிய தேர்தல் அறிக்கை குழு அமைப்பதைவிட, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.