மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் பெற்ற தந்தையே தனது ஐந்து வயது மாற்றுத்திறனாளி மகனை பாரமாகக் கருதி கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்தோஷ் சோனாஜி தாலே என்ற அந்த இரக்கமற்ற தந்தை, மற்றொரு பெண்ணின் உதவியுடன் இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். கேம்பிரிட்ஜ் சவுக் முதல் சவங்கி பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், துணியால் சுற்றப்பட்ட நிலையில் அந்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் போலீசார் உடலை மீட்டபோது, அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் கையில் ஒரு ஜூஸ் கிளாஸ் அப்படியே இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீசாரே கண்ணீர் விட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சிறுவனின் மூக்கு மற்றும் வாயை அமுக்கி மூச்சுத்திணறல் ஏற்படுத்தியும், தலை மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்படுத்தியும் இந்த கொடூரக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த எம்.ஐ.டி.சி சிட்கோ போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார், சிகல்தானா பகுதியில் இருந்து இறந்த சிறுவனின் அடையாளத்தைக் கண்டறிந்தனர். குற்றம் சாட்டப்பட்ட தந்தை சந்தோஷ் வாட்டர் ஜார் வண்டியில் வேலை செய்து வந்ததோடு, எட்டு நாட்களுக்கு முன்புதான் தன் குடும்பத்துடன் இந்த நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் தொடர் நோய்வாய்ப்பட்ட நிலை மற்றும் அவனைப் பராமரிப்பதில் ஏற்பட்ட சலிப்பு காரணமாகவே இந்த தீவிர முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொடூர தந்தை மற்றும் அவளுக்கு உதவிய பெண்ணைத் தேட போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். எம்.ஐ.டி.சி சிட்கோ காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
