கர்நாடகாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு காவல்துறை வாகனத்திலேயே இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த துணை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பரமேஸ்வரப்பா என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதையும், அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை ‘மிகவும் கொடூரமான’ வகையைச் சார்ந்தது அல்ல என்பதையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தண்டனைக் காலத்தைக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு தாயாக இருப்பதாலேயே குற்றத்தின் வீரியம் குறைந்துவிடாது என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் அபராதத் தொகையில், 4.50 லட்சம் ரூபாயைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பாதுகாப்பான சூழலை எதிர்பார்க்கும் பொதுமக்களிடையே இதுபோன்ற தண்டனை குறைப்பு நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
