மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரைப் பருகிய 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியமே உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுமார் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பாகீரத்புரா பகுதியில், கடந்த சில நாட்களாகக் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பருகிய பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கான முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
MP OUTRAGE: The guy in blue kurta defending Kailash Vijayvargiya’s vulgar ‘fokat’ & ‘ghanta’ remarks? He’s local councillor Kamal Waghela from the SAME area!While 10 people died from contaminated water, this man was busy swinging on a jhula. Priorities? #MadhyaPradesh pic.twitter.com/sH0NUcUMa2
— Career247Official (@Career247Offici) January 1, 2026
ஒரு பொதுக்கழிப்பிடத்திற்கு அடியில் சென்ற குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே கழிவுநீர் கலந்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தற்போது குழாய்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், முறையான பராமரிப்பு இல்லாததே இவ்வளவு பெரிய உயிர்ச்சேதத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் சாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டிய இந்தூர் கவுன்சிலர் கமல் வகேலா, எவ்விதக் கவலையுமின்றி ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “எங்கள் குடும்பத்தினர் உயிரிழந்ததை விட இவர்களுக்கு ஊஞ்சலாடுவதுதான் முக்கியமா?” எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குமுறுகின்றனர்.
ஏற்கனவே, இது குறித்துக் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ஒருமையில் பேசியது சர்ச்சையானது.
அப்போது அமைச்சருக்கு ஆதரவாகப் பேசியவர்தான் இந்த கமல் வகேலா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய கமல் வகேலா, “குடிநீரில் துர்நாற்றம் வீசுவது குறித்து முதன்முதலில் நான்தான் புகாரளித்தேன். நான் ஒரு நீரிழிவு நோயாளி. கடந்த மூன்று நாட்களாகத் தூக்கமின்றிப் பணியாற்றியதால், சற்று ஓய்வெடுக்கவே ஊஞ்சலில் அமர்ந்தேன்; நான் ஊஞ்சலாடவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மக்கள் பிரதிநிதிகளின் இத்தகைய அலட்சியமான போக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கவுன்சிலர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
