பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள முஃபாசில் காவல் நிலைய வரம்பில் அமைந்த ராம்பூர் பைராகி கிராமத்தில் நடந்த சத்தியார் (குழந்தை பிறந்த ஆறாவது நாள்) விழாவில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சர்வீஸ் ரிவால்வரை தவறாக பயன்படுத்தி, நடனக் கலைஞரை துப்பாக்கி காட்டி நடனமாடச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியான காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது துப்பாக்கியை நடனமாடும் பெண் ஒருவரும் கையில் வைத்திருந்து நடனமாடியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு பெண் பயந்தபடி இருக்கும் நிலையில் மற்றொரு பெண் துப்பாக்கியை கையில் வைத்து உற்சாகமாக நடனம் ஆடுவது காட்டப்படுகிறது.
குச்சாய் நீதிமன்ற காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அமித் சவுத்ரி, பவன் சாஹ்னியின் மகனின் சத்தியார் விருந்தில் கலந்து கொண்டபோது, தனது ரிவால்வரை கையில் பிடித்தபடி நடனக் கலைஞரைச் சுற்றி நடமாடிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும், நிகழ்வில் இருந்தவர்களைச் சுற்றியும் துப்பாக்கியை காட்டி நடனமாடச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமித் சவுத்ரி திடீரென கொண்டாட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சகோதரர் மிசிர் சவுத்ரி மற்றும் தீயணைப்பு துறையில் பணியாற்றும் அன்மோல் திவாரியும் அப்போது அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் துப்பாக்கி அசைப்பை எதிர்த்து பேசியபோது அவர்கள்மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து விவகாரம் மேலும் தீவிரமடைந்தது.
बिहार के बेतिया से पिस्टल लहराते ऑरकेस्ट्रा गर्ल का वीडियो वायरल हो रहा है। उसके साथ पुलिस के दो जवान भी नाच रहे हैं। बताया जाता है कि हथियार उन्हीं में से किसी एक का है। बेतिया एसपी ने कहा है कि दोनों के खिलाफ एफआईआर दर्ज कर तलाशी की जा रही है। लाइव हिन्दुस्तान वीडियो की पुष्टि… pic.twitter.com/H2KsW8DWPa
— Hindustan (@Live_Hindustan) November 28, 2025
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, முஃபாசில் காவல் நிலையம் அமித் சவுத்ரி, மிசிர் சவுத்ரி, அன்மோல் திவாரி மற்றும் இன்னும் அடையாளம் தெரியாத சில நபர்கள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மூவரையும் கைது செய்ய விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்க ஆயுதத்தை தவறாகப் பயன்படுத்துவது கடுமையான ஒழுக்க மீறல் எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுதச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் கோபால்கஞ்ச் டிஎஸ்பி விவேக் தீப் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவ வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
