தமிழக அரசியலில் வன்னியர் வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்திருந்த பாமக, தற்போது ‘அன்புமணி பாமக’ மற்றும் ‘ராமதாஸ் பாமக’ என இரண்டாகப் பிரிந்து நிற்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தனது தந்தை ராமதாஸை அந்தக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் திமுக பக்கம் ஒதுங்கிய ராமதாஸுக்கு, திருமாவளவனின் எதிர்ப்பால் அங்கேயும் இடம் கிடைக்கவில்லை. “சாதி கட்சி இருக்கும் இடத்தில் விசிக இருக்காது” எனத் திருமா கறாராகச் சொல்லிவிட்டதால், ஸ்டாலின் ராமதாஸைத் தனித்துப் போட்டியிடச் சொல்லி தேர்தல் செலவை கவனித்துக் கொள்வதாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

​மற்றொரு பக்கம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திடம் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. வட மாவட்டங்களில் ராமதாஸ் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தால், தனது சொந்த செல்வாக்கு மற்றும் தலித் மக்களின் வாக்குகள் பாதிக்கப்படும் என விஜய் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இதனால் எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் ராமதாஸ் தரப்பு தற்போது திணறி வருகிறது. 2026 தேர்தலில் ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.