40 நாட்களைக் கடந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்காலிகமாக போரை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உலக நாடுகள், சுகாதார அமைப்புகள், ஐநா கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து அந்த கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் போர் இடைநிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை போர் இடைநிறுத்தம் அமைதிக்கான வழியாக கருதப்படாது. ஆயுதங்களையும் தங்களின் ராணுவ தளவாடங்களையும் சேகரிக்கும் காலமாகத்தான் போர் இடைநிறுத்த காலத்தை ஹமாஸ் பயன்படுத்தும். பயங்கரவாதிகளை இந்த காலத்தில் பலம் பெற செய்து மீண்டும் அப்பாவிகள் மீது தாக்குதலை மேற்கொள்வார்கள்.

நமது நோக்கம் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக இல்லாமல் நிரந்தரமாக பயங்கரவாதத்திற்கு முடிவு கொண்டு வருவதாக இருக்க வேண்டும். வரலாற்று தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தொடரும் வன்முறைக்கு முடிவு வேண்டும். இஸ்ரேலும் பொதுமக்களின் உயிரிழப்பை குறைத்து தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போர் முடிவுக்கு வந்ததும் இரண்டு நாடுகளாக பாலஸ்தீனம் பிரிக்கப்படுவது தான் இதற்கு தீர்வு” எனக் கூறியுள்ளார்.