
இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசாவில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஓலா அட்னன் என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருப்பினும் அந்தப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது. இதனை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். தாய் இறந்தாலும் உயிருடன் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிறப்பதற்கு முன்பாகவே குழந்தை போரினால் தன் தாயினை இழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.