தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் ஐஸ்வர்யா ராஜேஷ், திரையுலகிற்கு வருவதற்கு முன்பே தான் சந்தித்த ஒரு கசப்பான மற்றும் அதிர்ச்சிகரமான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், சிறு வயதில் ஒரு புகைப்படக் கலைஞர் தன்னை போட்டோ ஷூட் என்று கூறி அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் அங்கு சென்றதும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளச் சொல்லி, அவ்வாறு அணிந்தால் தான் உடல்வாகைப் பார்க்க முடியும் என்று வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். அந்தச் சமயத்தில் எவ்வித விழிப்புணர்வும் இல்லாத சிறுமியாக இருந்த தனக்கு, ஒரு நிமிடம் அங்குள்ள சூழல் தவறாகத் தோன்றியதால், உடனடியாக அங்கிருந்து தப்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்தவர்கள் தன்னிடம் இன்னும் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பேசியிருந்தால், ஒருவேளை தான் அவர்களின் பேச்சைக் கேட்டு அந்த ஆடைகளை அணிந்திருக்கக்கூடும் என்றும், ஆனால் தனது உள்ளுணர்வு எச்சரித்ததால் அண்ணனிடம் அனுமதி பெற்று வருவதாகக் கூறி அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார்.
இதனால் “இப்படி இன்னும் எத்தனை பெண்களிடம் அவர்கள் தவறாக நடந்திருப்பார்கள்?” என்று ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், பல ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த மோசமான சம்பவத்தை தன்னால் மறக்க முடியவில்லை என்று மிகுந்த வேதனையுடன் அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
