சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு புகழ் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சிங்கம்புணரி என்ற பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வருடந்தோறும் சீசனுக்கு ஏற்றார்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் இத்தொழிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அதன்படி, கோவில் திருவிழா காலங்களில் அக்னி சட்டி, நேர்த்திக்கடன் பானைகள், ஆயிரம் கண் பானைகள், குறிப்பாக அய்யனார் கோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக செய்து வைக்கக்கூடிய மண் குதிரைகள், குழந்தை அம்மன் பொம்மைகள் கோடை காலங்களில் வீடுகளில் தண்ணீர் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வகையில் தண்ணீர் பானைகள் , கார்த்திகை மாதங்களில் கார்த்தி சுட்டி விளக்கு, அகல் விளக்கு, திருஷ்டி விளக்கு போன்ற உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இதையடுத்து தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் அதற்காக மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள், பொங்கல் வைப்பதற்கான மண் அடுப்புகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சிங்கம்புணரி பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கின்ற பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் லெட்சுமி என்பவர்  கூறியுள்ளதாவது, தங்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள், அகல் விளக்குகள் போன்றவற்றை விற்பனைக்கு வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து, மண்பாண்ட பொருள் தயாரிக்க மின்சார சுழல் சக்கரத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு நலிந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க அரசு உதவ வேண்டும் என்று கூறினார்.