திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரில் புகையான் என்ற நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்த நோய் தாக்குதல் நீர்மட்டத்திற்கு மேலே பயிரின் அடிப்பகுதியில் இருந்து இளம் குஞ்சுகளும், முதிர்ந்த பூச்சிகளும் சாற்றை உறிஞ்சும் தன்மையுடையது. இந்நிலையில் இந்த நோய் தாக்குதலுக்கு உட்பட்ட வயல்வெளிகளில் நெற்பயிர்கள் ஆங்காங்கே தீயில் கருகியது போன்ற தோற்றம் வெளிப்படும். மேலும் இந்த நோய் தாக்குதல் குட்டை நோய், காய்ந்த குட்டை நோய் அல்லது வாடிய குட்டை நோய் போன்ற நோய்களையும் பரப்பும் தன்மை கொண்டது.

இந்நோய் பரவல் குறைய, விவசாயிகள் தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து இந்நோயை கவர்ந்து அழிக்கலாம்.  இதையடுத்து தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது அசாடிராக்ட்டின் மூலக்கூறு 0.03 சதவீதம் 1000 மில்லி ஒரு ஹெக்டேருக்கு பயிரின் அடிப்பாகம் நனையுமாறு தெளிக்க வேண்டும்.

இதன் பின் செயற்கை பூச்சிக்கொல்லிகளான இமிடாக் குளோபிரேட் 17.8 எஸ்.எல்.100 மில்லி அல்லது பிப்ரோபெசின் 25 எஸ்.சி. 800 மில்லி அல்லது குளோர் ஆண்டிரநிலிபிரோல் 150 கிராம் அல்லது பிப்ரோநில் 5 சதவீதம் எஸ்.சி.1000-1500 மில்லி என ஒரு ஹெக்டேருக்கு ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி  இந்நோயை குறைக்கலாம். இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி  இந்நோய் தாக்குதலை, வரும் முன் காக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.