அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.

லெபனானில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை விடுவிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகள். இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதனால், இன்று இஸ்லாமாபாத்தில்நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. மறுபுறம், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்காக ஏற்கனவே புறப்பட்டுவிட்டது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கப் போர்க்கப்பல்களில் நவீன ரக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் ஈரானின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் இருந்தாலும்,இரு நாடுகளும் பரஸ்பரம் விடுத்துள்ள எச்சரிக்கைகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.