தெலுங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கணவரையும், மகளையும் கொன்று, நாடகமாடி சடங்கு நடத்திய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (58), தனது முதல் மனைவியை இழந்த பிறகு,   கவிதா என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு வர்ஷினி மற்றும் ஹன்சிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஹன்சிகா திருமணமாகி வெளியூரில் வாழ்ந்து வருகிறார். வர்ஷினி பெற்றோருடன் இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்ட குமாரசாமி, உடல்நலக்குறைவால் வீட்டிலேயே இருந்தார். இந்த நேரத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத ராஜ்குமாருடன், கவிதாவுக்கு கள்ளக் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த கள்ளத் தொடர்பு தெரியவந்ததும், குமாரசாமி மனைவியிடம் அதை கைவிடுமாறு  கேட்டுக்கொண்டார். இதைதொடர்ந்து ஏற்பட்ட தகராறின் பின்னணியில், கவிதா கணவரை கொல்ல திட்டமிட்டார்.

கடந்த ஜூன் 25ஆம் தேதி, மகள் இல்லாத நேரத்தில் ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார். அவருடன் சேர்ந்து, குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர், உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடி உடலை அடக்கம் செய்தனர். தந்தையின் மரணம் குறித்து சந்தேகம் கொண்ட மகள் வர்ஷினி, தாயிடம் ராஜ்குமார் எதற்காக அடிக்கடி வீட்டிற்கு வருகிறார் எனக் கேள்வியெழுப்பினார். இதனால், வர்ஷினி தனது கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருக்கிறார் என எண்ணிய கவிதா, மகளையும் கொலை செய்ய தீர்மானித்தார்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கவிதா மற்றும் ராஜ்குமார், பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி, மரத்தடியில் முள்புதரில் எறிந்தனர். பின்னர் மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்தார். கடந்த ஆகஸ்ட்  25ஆம் தேதி, வர்ஷினியின் பிணத்தை மீண்டும் எடுத்த ராஜ்குமார், பைக்கில் கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு சென்று, பிணத்தின் மீது மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்கள் தூவி, யாரோ சடங்கு செய்து கொன்றது போல நடிப்போடு தடம் மாற்ற முயன்றார். அருகே ஆதார் அட்டையை விட்டு சென்றதும் போலீசாரின் கவனத்தை ஈர்த்தது.

பிணத்தின் அருகே இருந்த ஆதார் அடிப்படையில் கவிதாவை போலீசார் அழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கவிதா, “யாரோ என் மகளை கொலை செய்துவிட்டார்கள்” என கதறி நடித்தார். ஆனால் அதிரடியாக நடந்த விசாரணையில், கவிதா தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரையும், மகளையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த கொடூர சம்பவம், கிராமத்திலும், மாவட்டத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.