உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அமர் கமல் ரஸ்தோகி, புத்தாண்டு அன்று லக்னோ செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி திடீரென மாயமானார். மகனைத் தேடி அலைந்த குடும்பத்தினர், அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் அவர் பிரயாக்ராஜில் நடக்கும் மாக் மேளாவில் துறவியாக மாறியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பதறிப்போய் அங்கு சென்ற தாயைக் கண்டபோது, ஆரம்பத்தில் தனது தாயை அடையாளம் காண அந்த இளைஞர் மறுத்துள்ளார். பின்னர் தாயின் அழுகையைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டாலும், தனது உலகப் பற்றுகளைத் துறந்துவிட்டதாகவும் இனி கடவுள் வழிபாட்டிலேயே காலத்தைக் கழிக்கப் போவதாகவும் கூறி வீட்டிற்கு வர மறுத்துவிட்டார்.

தனது மகனை மீண்டும் குடும்பத்தோடு சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சென்ற தாய், மகனின் பிடிவாதத்தால் கனத்த மனதுடன் வீடு திரும்பியுள்ளார். சுவாமி கோபால் தாஸ் என்பவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட அமர், தற்போது காவி உடை அணிந்து முழுநேரச் சந்நியாசியாக மாறிவிட்டார்.

கும்பமேளா போன்ற ஆன்மீக விழாக்களின் போது இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இதுபோன்று துறவறம் மேற்கொள்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தன் மகன் என்றாவது ஒருநாள் மனம் மாறி வருவான் என்ற எதிர்பார்ப்பில் அவரது தந்தை காத்திருக்கிறார்.