நிழல் உலகிற்கு அழைத்துச் செல்லும் போதைப் பழக்கம் மற்றும் தவறான நடத்தையினால், நாக்பூரில் ஒரு சிறுவன் தனது பெற்றோராலேயே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 வயதே ஆன அந்த சிறுவன், தொடர்ந்து செல்போன்களை திருடியும், அக்கம்பக்கத்தினரிடம் முறையற்ற வகையிலும் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் மகனின் இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய பெற்றோர், வேறு வழியின்றி அவனது கால்களைச் சங்கிலியால் பிணைத்து கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். இந்தக் கொடுமை குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர், குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று சிறுவனை மீட்டனர்.
அப்போது சிறுவன் மிகவும் பரிதாபகரமான நிலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையைத் துன்புறுத்தியதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே சமயம், சிறுவனுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும், அவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
