உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 6 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு ஏற்பட்ட பலத்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு மோதலுக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் பிடிபட்ட குற்றவாளிகளின் காலில் துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
